தமிழ்நாட்டில் அக்.1 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும். மேலும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களிலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அதன்படி கடந்த மாதம் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் மதுபான கடைகள் செயல்படவில்லை.
இந்நிலையில் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 5ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருக்கிறது. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய வள்ளலாருக்கு மரியாதை செய்யும் விதமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை இதுவரை புதுச்சேரி அரசு, சென்னை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்.