தமிழக விவசாயிகளை இதற்காக கட்டாயப்படுத்தாதீங்க….. கூட்டுறவுத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர்த்து வேறு உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, விவசாயிகளுக்கு தேவையான ரசாயன உரங்களை தமிழகத்திலுள்ள சுமார் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக கூட்டுறவுத்துறை விநியோகம் செய்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெறும் விவசாயக் கடன்களில் உரப் பகுதியாகவோ (அல்லது) ரொக்கத்திற்கோ உரங்களைப் பெற்று வருகின்றனர்.

நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் உரங்களுக்கான கச்சாப்பொருட்களின் விலை ஏற்றம், இறக்குமதி பற்றாக்குறை போன்ற நெருக்கடியான சூழல் நிலவிவந்த போதிலும், தமிழகத்தில் 0104/2022 முதல் இதுவரையிலும் 62,768 மெ.டன்கள் யூரியா உரமும், 50,123 மெ.டன்கள் டிஏபி உரமும், 23,544 மெ.டன்கள் பொட்டாஷ் உரமும், 60,771 மெ.டன்கள் காம்ப்ளக்ஸ் உரங்களும் ஆக மொத்தம் 1,97,206 மெ.டன்கள் ரசாயன உரங்கள் விவசாயப் பெருமக்களுக்கு வழங்குவதற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களில் நாளது தேதியில் 15,463 மெ.டன்கள் யூரியா உரமும், 13,134 மெ.டன்கள் டிஏபி உரமும், 12,535 மெ.டன்கள் பொட்டாஷ் உரமும் மற்றும் 32,669 மெ.டன்கள் காம்ப்ளக்ஸ் உரங்களும் என மொத்தம் 73,801 மெ.டன்கள் இரசாயன உரங்கள் இருப்பாக இருக்கிறது. இவற்றில் யூரியா உள்ளிட்ட அனைத்து உரவகைகளும் தேவைக்கு ஏற்றவாறு வழங்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளது தேதியில் 311 மெ.டன்கள் யூரியா உரமும், 327 மெ.டன்கள் டிஏபி உரமும், 225 மெ.டன்கள் பொட்டாஷ் உரமும் மற்றும் 335 மெ.டன்கள் காம்ப்ளக்ஸ் உரங்களும் என மொத்தம் 1,198 மெ.டன்கள் இரசாயன உரங்கள் இருப்பாக இருக்கிறது.

இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளது தேதியில் 548 மெ.டன்கள் யூரியா உரமும், 292 மெ.டன்கள் டிஏபி உரமும், 455 மெ.டன்கள் பொட்டாஷ் உரமும் மற்றும் 146 மெ.டன்கள் காம்ப்ளக்ஸ் உரங்களும் என மொத்தம் 1,441 மெ.டன்கள் இரசாயன உரங்கள் இருப்பாக இருக்கிறது. முதலமைச்சரால் டெல்டா மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் பயன்பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட குறுவை சாகுபடி திட்டத்தில் நாளது தேதிவரை 7,635 மெ.டன்கள் யூரியா உரமும், 8,487 மெ.டன்கள் டிஏபி உரமும் மற்றும் 4,240 மெ.டன்கள் பொட்டாஷ் உரங்களும் என மொத்தம் 20,362 மெ.டன்கள் ரசாயன உரங்கள் விவசாய பெருமக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் அவர்களுக்கு தேவையுள்ள உரங்களை மட்டும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களில் தாங்கள் பெறக்கூடிய கடன் பகுதிக்கோ (அல்லது) ரொக்கத்திற்கோ பெற்றுக்கொள்ளலாம். இது தவிர்த்து நானோ யூரியா உள்ளிட்ட எந்தவகை உரங்களோ (அல்லது) விவசாய இடுபொருட்களோ வாங்குவது கட்டாயமல்ல. இதுகுறித்து உரிய அறிவுரைகள் மண்டல இணைப் பதிவாளர்கள் வாயிலாக அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. ஆகவே விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர்த்து வேறு உரங்கள் மற்றும் இடுப்பொருட்கள் கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . விவசாயிகள் இது பற்றிய புகார்களை மாவட்டத்திலுள்ள கூட்டுறவுத் துறையின் இணைப்பதிவாளர் அவர்களுக்கு தெரிவிக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *