தமிழக பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை எப்போது?…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, 6-12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் அடிப்படையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை நிறைவேற்றப்படாத சிறந்த திட்டத்தை முதல்வர் நடைமுறைப்படுத்தியுள்ளார். இதன் வாயிலாக மாணவிகள் உயர்கல்வி கற்பது அதிகமாகும். பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்கல்வி பயில அனுப்பி வைப்பார்கள்.

கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிக்கூடங்கள் சரியாக திறக்கப்படவில்லை. வரும் மேமாதம் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்தபின், கோடை விடுமுறை வழங்குவது குறித்து துறைரீதியாக ஆலோசனை மேற்கொண்ட பிறகுதான் முடிவு செய்யப்படும். இதனிடையில் பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தில் கல்வித் துறைக்கு தொடர்ந்து 5 வருடங்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக இந்த வருடம் ரூபாய் 1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளில் கழிப்பறைகள், ஆய்வுக்கூடம், மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும்.
சென்ற மாதம் சேலத்தில் நடைபெற்ற மண்டல ஆய்வின் போது, மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் அடிப்படையில் கையேடுகள் அறிமுகப்படுத்தினோம். மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய 44 பகுதிகளில் சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் பயனடையும் அடிப்படையில் 1,100 ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும்..? என்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்கள் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் அடிப்படையில் முதற்கட்டமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *