தமிழக சட்டமன்ற தேர்தல்களின் வரலாறு ….!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களின் வரலாறு பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் 1951 நவம்பர் மாதம் முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் அருதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 309ஆக இருந்தது. இதில் இரட்டை உறுப்பினர் தொகுதிகளின் எண்ணிக்கை 66. ஆகவே மொத்தமாக 375 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. இந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பகுதியில் 190 உறுப்பினர்களும், ஆந்திரப்பிரதேச பகுதியில் 143 பேரும், கர்நாடக பகுதியில் 11 பேரும், கேரள பகுதியில் 29 பேரும் இடம்பெற்றிருந்தனர்.

இதன்பிறகு 1957, 1962 ஆகிய ஆண்டுகள் சென்னை மாநிலம் என்ற பெயருடன் தமிழகம் சட்டமன்ற தேர்தல்களை சந்தித்தது. இந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசும், 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவும் வென்றது. அதன் பிறகு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1976ஆம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. மேலும் நெருக்கடி நிலை பிரகடனபடுத்தபட்டதால் 1976 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய தேர்தல் ஓர் ஆண்டு கழித்து 1977 இல் நடத்தப்பட்டது.

1977 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொது தொகுதிகளில் இருந்தும், 45 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் முதல் முறையாக அஇஅதிமுக வெற்றி பெற்று, எம்ஜிஆர் முதலமைச்சராக பதவியில் அமர்ந்தார். அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று அடுத்த 12 ஆண்டுகள் அவரே தமிழகத்தின் முதல்வராக பதவியில் இருந்தார். அதன்பிறகு 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது.

திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சிகள் களம் கண்டனர். இதில் 69.69% வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை. அதன்பிறகு 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற ஜெயலலிதா முதல் முறையாக முதல்வரானார். அதன்பிறகு 1996, 2001, 2006 தேர்தல்களில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்றது. எம்ஜிஆர் அவர்களின் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக இரண்டு முறை அதாவது 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அஇஅதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சரானார். தற்போது வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தமிழக சட்டசபைக்கான 16வது சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *