தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது… 62 ஆக அதிகரிப்பு?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு அரசு அவர்களுக்கு பல சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற வருடம் பரவிய கொரோனா தொற்று காலக்கட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி கடந்த 2022 ஜனவரிமாதம் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 17 சதவீதத்திலிருந்து 31% ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இப்போது பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனையும் நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 62ஆக உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்ற 2020 ஆம் வருடம் அதிமுக தலைமையிலான அரசு ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக அதிகரித்தது. இதற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இருப்பினும் அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பானது நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய இத்தகைய முடிவை அரசு எடுத்ததாக கூறப்பட்டது. இப்போது தி.மு.க தலைமையிலான அரசு ஓய்வுபெறும் வயதை 62ஆக உயர்த்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

நடப்பாண்டில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் ஓய்வு பெற்றால் அரசுக்கு சுமார் 18,000 கோடி நிதி தேவைப்படுகிறது. அத்துடன் இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்க 300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அடுத்துள்ள காலிப் பணியிடங்களை பூர்த்திசெய்ய புதியவர்களை பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு ஊதியம் வழங்க 600 கோடி செலவு ஆகும். ஆகவே மொத்தம் இப்போது 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் ஓய்வுப் பெற்றால் அரசுக்கு வருடத்திற்கு 18,400 கோடி தேவைப்படும். இத்தகைய செலவினத்தை தவிர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *