ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு  மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசு தொகுப்பாக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன், சர்க்கரை, கரும்பு, பச்சரிசி போன்றவை வழங்கப்பட்டது. கடந்த  9-ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. இதுவரை 92 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 6 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு  வாங்கவில்லை.

அவர்களில் பலர் சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்ற காரணத்தினால் வாங்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தமிழக அரசு சார்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத காரணத்தினால் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுமா? என்ற குழப்பத்தில் ரேஷன் அட்டைதாரர்கள்  இருந்தனர். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தான் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது, மறு உத்தரவு வரும் வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குமாறு மண்டல இணை பதிவாளர்களிடம் கூறப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.