தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் பொது தேர்வு நடைபெற உள்ளது. அதாவது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 தொடங்கி மார்ச் 25 வரையிலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி 22ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பொது தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து மாலை 4:30 மணி முதல் 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பசி ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மாலை நேரத்தில் சிறுதானிய வகைகள், சுண்டல், பச்சைபயிறு போன்ற சத்து மிகுந்த சிற்றுண்டி உணவுகள் வழங்கப்பட உள்ளது.