தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று தளபதி விஜய் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் இணையதளத்தில் பல்வேறு விதமாக மோதிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சரிசமமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதோடு சினிமாவில் நம்பர் 1 இடம் மாறிக்கொண்டே இருக்கும். எனவே யார் நம்பர் 1 என்று பேசுவது தவறு. இரண்டு படங்களுக்கும் அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி டிக்கெட் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு தியேட்டர் தொடர்பான தொடர் சர்ச்சைகள் வந்த நிலையில் தற்போது திருப்பூர் சுப்பிரமணியம் 2 படங்களுக்கும் சரிசமமான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.