தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு…? அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 30 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இது பரவ ஆரம்பித்து 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.  20 நாட்களில் வைரஸ் வேகமாக பரவி வருகிறதே தவிர இதன் வீரியம் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பு என்பது இதுவரை இல்லை. அதிக ஆபத்து நிறைந்த நாடுகள், பாதிப்பு இல்லாத நாடுகள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இருந்து வருகை புரிவோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த பிறகுதான் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது. அண்டைய மாநிலங்களிலிருந்து போக்குவரத்திற்கு தடை, முழு ஊரடங்கு போன்றவற்றிற்கான சூழல் தமிழகத்தில் தற்போது கிடையாது என்று அவர் பதிலளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்தியாவில் தற்போது கர்நாடக மாநிலத்தில் மட்டும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான்  தொற்று வரவில்லை. சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முக கவசம், தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் ஊரடங்கு என்ற எல்லைக்கே நாம் போக வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *