தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கோட்டையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றிய நிலையில் அதன் பின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 76 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகம் ஆரம்பிக்கப்படும் என்றும் முதல் கட்டமாக 1000 இடங்களில் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் பொதுப்பெயர் வகை மருந்துகள் மற்றும் பிறவகை மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கப்பெறும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட மருந்தாளர்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு தேவையான கடன் உதவியோடு அரசு சார்பில் 3 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் மாதம் 20 ஆயிரத்தில் இருந்து 21,000 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதே போன்று தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் 10 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரம் ஆகவும், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் 10,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.