தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கல் கடல் பகுதிகளில் வலுவடைய கூடும். பிறகு மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோர பகுதி அருகே நிலவக்கூடும்.

இன்று கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் தமிழகத்தில் 7ஆம் ஏழாம் தேதி கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் காலையில் அறிவித்திருந்தது. அதன் பிறகு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அன்றைய தினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 24ல் இருந்து 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை, 7ஆம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 7ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள்  இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.