ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்து வந்தவர் திருமகன் ஈவெரா(46). இவர் கடந்த சில தினங்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று காலை அவர் கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்தார். இதையடுத்து காலை 10 மணிக்கு மேல் திடீரென அவருக்கு மூச்சுதிணறல் ஏற்படுவதாக உடன் இருந்தவர்களிடம் தெரிவித்தார்.
அதன்பின் பகல் 11 மணி அளவில் உடன் இருந்தவர்கள் அவரை ஈரோடு கே.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது ஈவெராவை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா(46) மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அத்தொகுதிக்கு அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் வர இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.