தண்ணி இல்லாம கஷ்டபடுறோம்… நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… சிவகங்கையில் பெண்கள் சாலை மறியல்..!!

குடிநீர் கேட்டு இளையான்குடியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஆரிப்நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் கடந்த ஆறு மாத சரிவர வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு பலரும் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் இணைப்பு கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளையான்குடி-காரைக்குடி செல்லும் சாலையில் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சென்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் புதிய குடிநீர் இணைப்பு தேர்தல் முடிந்த பின்பு வழங்கப்படும் என்று பேரூராட்சி அலுவலளர்கள் கூறினர். மேலும் பொதுக் குழாயில் குடிநீர் வினியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.