தடை செய்தும் ஏன் விற்கிறீர்கள்..? ரோந்து பணியில் போலீசார்… பெட்டிக்கடை உரிமையாளர் கைது..!!

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பெட்டிக்கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்ட விரோதமான செயல்கள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோமையார்புரத்தில் நேற்று தாலுகா துணை காவல்துறை ஆய்வாளர்கள் ஜாபர், ஜெய்கணேஷ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பெட்டிக் கடையின் உரிமையாளர் பேகம்பூர் ஜமால் தெருவில் வசித்து வரும் ராஜா முகமது என்பது தெரியவந்தது. இதனையடுத்து பெட்டிக்கடை உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.