டெல்லியில் அஞ்சலி என்ற இளம் பெண் புத்தாண்டு தினத்தில் தன்னுடைய தோழியுடன் அதிகாலை 3 மணியளவில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் இளம் பெண்ணின் உடல் காரில் சிக்கியபடி பல கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் காரில் இருந்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவத்தின் பதற்றமே இன்னும் அடங்காத நிலையில், புத்தாண்டு தினத்தில் இதேபோன்று மற்றொரு கொடூர சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கவுசல் யாதவ் என்பவர் டெல்லியில் ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நொய்டா நகரில் உள்ள ஒரு மேம்பாலத்தில் இரவு நேரத்தில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கார் வாலிபரின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. அதன் பின் அந்த வாலிபரின் உடல் காரில் சிக்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த கார் சனிக்கோவில் அருகே நின்ற நிலையில் காரில் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து வாலிபரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் டெல்லியில் அஞ்சலி என்ற இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதே போன்று மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.