ஜெ., நினைவிடத்தில் கண்ணீர்… “மனதிலிருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்தேன்”…. சசிகலா உருக்கம்!!

கடந்த 4 ஆண்டுகளாக மனதில் வைத்திருந்ததை நினைவிடத்தில் இறக்கி வைத்து விட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமனம் செய்யப்பட்டனர்.. மேலும் அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்றும் அதிமுக தலைமை தெரிவித்தது..

இந்த சூழலில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் அடி எடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், தொண்டர்களிடம் ஆடியோவில் உரையாடல், தொண்டர்கள் சந்திப்பு என அதிமுகவை  கைப்பற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.. இதற்கிடையே அதிமுக மாஜி அமைச்சர்கள் சசிகலாவை விமர்சனம் செய்து வருகின்றனர்..

இந்நிலையில்அதிமுக தனது 50-வது ஆண்டு பொன்விழா நாளை கொண்டாடப்படவுள்ள சூழலில் சசிகலா இன்று காலை சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார்.. வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. பின்னர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற சசிகலா மலர் வளையம் வைத்து கண்ணீர் விட்டு அழுதபடியே அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து சசிகலா மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் அஞ்சலி செலுத்தினார்..

 

 

ஏற்கனவே 2017 பிப்ரவரி மாதம் சிறை செல்வதற்கு முன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று தோழி சசிகலா சபதம் செய்திருந்தார்.. சசிகலா சிறை சென்று திரும்பிய பின்னரே ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.. ஆனால் கட்டுமானப்பணியை காரணம் காட்டி அப்போதைய அதிமுக அரசு தடை விதித்தது.. தற்போது திமுக அரசு ஆட்சியிலிருக்கும்  நிலையில், அனுமதி பெற்று சசிகலா சென்றுள்ளார்..

அஞ்சலி செலுத்திய பின் சசிகலா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மனதில் இருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்தேன்.. நடந்த விஷயங்களை எல்லாம் ஜெயலலிதாவிடம் கூறினேன்.. நல்ல எதிர்காலம் உள்ளது என்பதையும் சொல்லி விட்டு தான் வந்தேன். ஜெயல‌லிதா நினைவிடத்திற்கு நான் வந்த‌தற்கான காரணம் அனைவருக்கும் தெரியும்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர். அதிமுகவையும் தொண்டர்களையும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்” என்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *