“ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு” எல்லாம் சரியாதான் போகுது… மதுரை கிளை நீதிபதி தகவல்…!!

சாத்தான்குளத்தில் நடைபெற்ற தந்தை- மகன் கொலை வழக்கு சரியான பாதையில் செல்வதாக மதுரை ஐகோர்ட் கிளை கூறியுள்ளது .

மதுரை சாத்தான்குளம் அருகே வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை ஐகோர்ட் கிளை இந்த கொலைச் சம்பவத்தை தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கத்தின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மூடி முத்திரையிடப்பட்ட கவரில் கொலைக்கான அறிக்கையை சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை படித்த நீதிபதிகள் இரட்டை கொலை வழக்கானது சரியான பாதையில் செல்கிறது எனவும், அறிவியல்பூர்வ சோதனைக்காக காத்திருப்பதாகவும் கூறினார். இந்த வழக்கில்  தங்களையும் சேர்க்க கோரி இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகத்தின் சத்தியமூர்த்தி, வாசுகி ஆகியோரின் மனுக்களையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடும் போது “போலீசார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும்போது பின்பற்றும் வழிமுறைகளை உருவாக்குவதற்காக உயர்மட்ட குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.” என்று கூறினார் . இதனைத்தொடர்ந்து இந்த உயர்மட்ட குழு அமைப்பு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சிபிஐ மீண்டும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் கொலை தொடர்பான விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *