தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாக உடைய ஆசியான் பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின்(APPU) தலைமைப் பொறுப்பை இந்தியா இந்த மாதம் ஏற்றுக்கொள்கிறது. சென்ற வருடம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பாங்காங்கில் நடந்த 13வது ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அஞ்சலக சேவைகள் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் வினயா பிரகாஷ் சிங் ஒன்றியத்தின் தலைமை செயலாளராக 4 வருடங்களுக்கு பொறுப்பு வகிக்க இருக்கிறார்.

இது தொடர்பாக பிரகாஷ் சிங் கூறியதாவது, அஞ்சல் ஒன்றியத்தின் வாயிலாக வணிக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஒன்றியத்தின் நீடித்த நிலைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், மறுசீரமைப்பதற்கும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலுள்ள அஞ்சல் துறைகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே என் குறிக்கோள்என்று கூறினார்.

ஆசியான்-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த 32 நாடுகள் கலந்துகொண்டுள்ள அமைப்பாக இருக்கும் ஆசியான் பசிபிக் அஞ்சல் ஒன்றியம், இப்பிராந்தியத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். உறுப்பு நாடுகளுக்கு இடையில் அஞ்சலகம் தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதும் அஞ்சல் சேவைகளில் ஒத்துழைப்பை வழங்குவதும் இதன் நோக்கம் ஆகும். இந்தியா ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதை அடுத்து இந்த பொறுப்பையும் ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.