பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், 16 முதல் 18 வரை பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 15,599 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ஜனவரி 12 முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை தமிழகத்தில் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து மட்டும் 10,749 பேருந்துகளும், தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளும் இயக்கப்படும்.  சென்னையில் 5 பேருந்து நிலையங்களில்இருந்து 10,749 பேருந்துகள் 3 நாட்களில் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி உள்பட 12 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று தெரிவித்தார்.

மேலும் மாதவரம், கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.தாம்பரம் பேருந்து நிலையம் பூந்தமல்லி பைபாஸ் சாலை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். முதல்முறையாக பூந்தமல்லியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. 16 முதல் 18 வரை பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 15,599 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் பண்டிகையை ஒட்டி கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் கட்டணம் இல்லா தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.
மக்களுக்கு தேவையான அளவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையத்துக்கு செல்ல வசதியாக சென்னை நகர் முழுவதும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளில் பயணிக்க www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-2628445 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக 9445014450 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.