பெரும்பாலான பொதுமக்கள் முதலீடு செய்வதற்கு தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளையே விரும்புகிறார்கள். ஏனெனில் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் தான் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. அதன் பிறகு பொது மக்களின் வசதிக்காக போஸ்ட் ஆபீஸில் பல்வேறு விதமான திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவும் வகையில் தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டம் இருக்கிறது. இந்த சேமிப்பு உங்கள் பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 வருடங்களுக்கு டெபாசிட் செய்து கொள்ளலாம். உதாரணமாக உங்கள் குழந்தைக்கு 5 வயது எனில், நீங்கள் 20 வயது வரை டெபாசிட் செய்து லாபம் ஈட்டலாம். ஒருவேளை 9 வயதில் கணக்கு தொடங்கினால் 24 வயது வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு 10 வயது இருக்கும் வரை மட்டுமே முதலீடு செய்து கொள்ள முடியும். குழந்தை பிறந்தவுடன் கூட கணக்கு தொடங்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனால் 10 வயது கடந்து விட்டால் கணக்கு தொடங்க முடியாது. குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடையும் வரை குழந்தையின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கணக்கை நிர்வகித்துக் கொள்ளலாம். 18 வயதை கடந்த பிறகு சம்பந்தப்பட்ட பெண் மட்டும் தான் கணக்கை நிர்வகிக்க முடியும். வேறு யாரும் கணக்கை நிர்வகிக்க முடியாது. மேலும் திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு முன்னதாக நீங்கள் பணத்தை எடுக்க விரும்பினால் கணக்கு தாரரின் திருமணத்திற்கு மட்டுமே முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்பாக பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.