சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ கல்லூரி வளாகத்தில் நேற்று 46-வது புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் பரப்புரை கழகத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சங்க இலக்கிய பாடல்களை அடிப்படையாகக் கொண்ட சங்க இலக்கிய மாத நாள்காட்டியினை வெளியிட்டார். இந்த நாள்காட்டியை முதல்வர் வெளியிட அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக்கொண்டார்.

இந்த நாள்காட்டி தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் வரையப்பட்ட ஓவியங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாள்காட்டிகள் தயாரிக்கும் பணியினை தமிழ் இணைய கல்விக் கழகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு. மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.