சுற்றி வளைத்த போலீஸ்…. பிரபல ரவுடி சுட்டு கொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

காவல்துறையினரை தாக்கிய பிரபல ரவுடி என்கவுண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கூட்டாம்புளி திருமலையாபுரம் பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துரைமுருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் வசித்த ஜெகதீஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் துரைமுருகனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் துரைமுருகனின் செல்போன் சிக்னல் காண்பித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது கைவிடப்பட்ட காற்றாலை இருக்கும் இடத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் தனது கூட்டாளிகளான ஆரோக்கியராஜ், ராஜா ஆகியோருடன் துரைமுருகன் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் சுற்றி வளைத்ததை அறிந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். மேலும் துரைமுருகன் அரிவாளால் போலீஸ்காரரான டேவிட் ராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்பிரபு ஆகியோரை வெட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் அவர் காவல்துறையினரை தாக்க முற்பட்டதால் ராஜ்பிரபு துப்பாக்கியால் துரைமுருகனை சுட்டுவிட்டார்.

இதனால் சம்பவ இடத்திலேயே துரைமுருகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த தென்மண்டல ஐ.ஜி அன்பு, நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த காவல்துறையினரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் துரைமுருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *