சிறப்பு மருத்துவ முகாம்… கலந்து கொண்ட கர்ப்பிணிகள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட கரந்தை, மானம்புச்சாவடி, கல்லு குளம், சீனிவாசபுரம் ஆகிய நான்கு இடங்களில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 73 கர்ப்பிணிகள் கலந்து கொண்டு பரிசோதனை செய்துள்ளனர். இதில் கர்ப்பிணிகளுக்கான ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து நிறைந்த உணவுகளின் முக்கியத்துவம் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த நிறமியின் அளவு ஏழு முதல் 9.9 கிராம் வரை இருக்கும் ரத்த சோகை உள்ள கர்ப்பிணிகளுக்கு அயன் சுக்ரோஸ் ஊசி 20 வாரங்களுக்கு பின் இரண்டு நாட்கள் இடைவெளியில் நான்கு ஊசிகள் செலுத்தப்படுகிறது.

அதே போல் கர்ப்ப காலத்தில் நாலாவது மாதத்தில் குடல்புழு நீக்கி மாத்திரை கொடுக்கப்படுகிறது. மேலும் 4வது மாதம் முதல் கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரைகள் 100 வழங்கப்படுகிறது. அதை போல் பேரிச்சம் பழம், வெல்லம் போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால் ரத்த சோகை நோயை தடுத்து தாய் சேய் நலம் பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply