சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு…. சீறிப்பாய்ந்த காளைகள்… 26 பேர் படுகாயம்..!!

மதுரை சத்திர வெள்ளாளப்பட்டியில் உள்ள சின்னம்மன் கோவில் ஜல்லிக்கட்டு திருவிழாவில்  26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பாலமேடு, சத்திர வெள்ளாளப்பட்டியில் உள்ள சின்னம்மன் கோவில் திருவிழாவில் நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகிபிரேமளா தலைமை வகித்து உறுதிமொழி வாசித்து கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த இந்த விழாவில்  மதுரை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும்  ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டிக்கு முன்னதாகவே மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் தனித்தனியாக மருத்துவ பரிசோதனை செய்து போட்டி ஆரம்பிக்கப்பட்டது. முதலில் கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு, அதையடுத்து வாடிவாசலில் இருந்து பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு திமிலை பிடித்து அடக்கினார்கள். பார்வையாளராக பா. ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மாடுபிடி வீரர்களை பார்த்து கையசைத்து அவர்களை ஊக்குவித்து விழாவை சிறப்பித்தார்.

இப்போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 702 காளைகள் கலந்து கொண்டு ஆறு சுற்றுகளாக நடந்த போட்டியில் சீருடைகள் அணிந்து 300 வீரர்கள் 50 பேர் வீதம் கலந்து கொண்டார்கள். இதில் மாட்டை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், தங்கம்,வெள்ளி காசுகள், டிவி, சைக்கிள், கட்டில், சேர், அண்டா உள்ளிட்ட பாத்திரங்களும், இருசக்கர வாகனங்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் காயமடைந்த 23 பேருக்கு மதுரை பாலமேடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழுவினர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராம்குமார்(24), ராஜக்காள்பட்டி பகுதியை சேர்ந்த சேகர் (27) மற்றும் பார்வையாளரான  எர்ரம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (15)ஆகிய 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக  400  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.  இந்த விழா ஏற்பாடுகளை சத்திரவெள்ளாளப்பட்டி பொதுமக்கள் செய்துள்ளார்கள். மாலை 4 மணிக்கு போட்டி நிறைவு பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *