சிகிச்சை பெற்ற சிறுமி உயிரிழப்பு…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனாங்கோட்டையில் ஜெயகிருஷ்ணன்- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாக்சி(7) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காய்ச்சல் மற்றும் வாந்தி எடுத்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சிறுமியை பெற்றோர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸ் இல்லாததால் ஒரு ஆட்டோவில் சிறுமியை திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கோபமடைந்த சிறுமியின் உறவினர்கள் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாக்சியின் உறவினர்கள் வலியுறுத்தினர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *