சென்னையில் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதே வளாகத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். அதன் பிறகு புத்தக கண்காட்சியில் 30 நாடுகளின் அரங்குகள் இடம்பெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியில் பிரம்மாண்ட திருக்குறள் புத்தகமும் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, இந்த அரங்கம் புத்தகங்களை விற்பனை செய்வதற்கு கிடையாது. இது தமிழ்நாட்டின் புத்தகங்களையும் வெளிநாடுகளின் புத்தகங்களையும் மாறி மாறி விற்பனை செய்து கொள்ளும் அரங்காகும். இதன் மூலம் தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லவும் உலக அளவில் உள்ள சிறந்த இலக்கியங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் 1 கோடியே 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். தமிழ்நாட்டில் ஏராளமான புத்தகங்கள் இருந்தாலும் 100 புத்தகங்கள் மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச கண்காட்சியில் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. தமிழில் இருந்து உலக மொழிகளுக்கு 90 நூல்கள், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு 170 நூல்கள் மொழிபெயர்ப்பு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் இந்த வருடம் 30 வெளிநாட்டு அரங்குகள் இடம் பெற்றுள்ள நிலையில் அடுத்த வருடம் 60 வெளிநாட்டு அரங்குகள் இடம்பெறும் என்றும் கூறினார்.