சட்டமன்ற தேர்தல் பணி மும்முரம்… தபால் ஓட்டுக்களை பிரிக்க பெட்டிகள்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

தபால் ஓட்டுகளை பிரிக்க பெட்டிகள் தயாரிக்கும் பணி காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் இந்த சட்டமன்ற தொகுதியில் பதிவாகும் எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம், வாக்கு பெட்டி வைக்கும் அறை என அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் பார்வையாளர்கள் அமரும் இடம் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் நடுவில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியாக மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கும் அறையில் காற்று புகாதவாறு அவற்றை சுற்றி பலகை வைத்து அடைக்கப்பட்டுள்ளது. மேலும் தபால் ஓட்டுகள் பிரிப்பதற்காக பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலரான மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.