தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். ஆளுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போதே எழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றிலும் முரணான அடிப்படையில் ஆளுநர் நடந்துகொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
பேரவை துவங்கும்போது அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி, கண்ணியத்தோடு எந்த எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறிய அவர், அரசின் கொள்கைகளுக்கு மாறாக நடந்து கொண்ட ஆளுநர் உரை சட்டமன்ற மரபுகளை மீறிய செயல் என்று கண்டித்தார். ஆளுநரால் சேர்க்கப்பட்ட எந்த பகுதிகளிலும் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதை கேட்ட ஆளுநர் கோபத்துடன் தேசியகீதம் இசைப்பதற்குள் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். ஆளுநரின் இச்செயலுக்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.