கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்….. தலைக்குப்புற கவிழ்ந்த கார்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரான சர்மா என்பவர் தனது மனைவி பாரதி, மகள் பிரன்யா ஆகியோருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த கார் கரூர்- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின் பகுதியில் பலமாக மோதியது.

மேலும் கார் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சர்மா, பாரதி, பிரன்யா ஆகிய 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.