கோப்பா டெல் ரே காலிறுதிப் போட்டியில் பார்சிலோனோ, ரியல் மாட்ரி தோல்வி

ஸ்பெயினில் நடத்தப்படும் கோப்பா டெல் ரே கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகளில் பார்சிலோனோ, ரியல் மாட்ரிட் ஆகிய அணிகள் தோல்வியைத் தழுவின.

ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கோப்பா டெல் ரே தொடர் ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படுகிறது.இதனிடையே இந்தாண்டுக்கான தொடரின் காலிறுதிப் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனோ அணி அத்லெட்டிக் பில்பாவ் அணியுடன் மோதியது.இப்போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சமபலத்துடன் மோதிக்கொண்டதால் ஆட்டம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்காமல் இருந்தநிலையில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் அத்லெட்டிக் பில்பாவ் அணி வீரர் செர்கியோ பஸ்கெட்ஸ் (90+3நிமிடம்) ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.இதன்மூலம் பார்சிலோனோ அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அத்லெட்டிக் பில்பாவ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

கோப்பா டெல் ரே தொடரில் அதிகமுறை (30) சாம்பியன் மகுடத்தை சூடிய அணியான பார்சிலோனோ அணி இம்முறை தொடர்ச்சியாக ஏழாவது முறையாக இத்தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், பார்சிலோனோ அணி இம்முறை காலிறுதியிலேயே தோல்வியுற்று வெளியேறியதால் அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதே போன்று மற்றொரு காலிறதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-4 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட் அணியிடம் தோல்வியைத் தழுவியது.இதனால் 2010ஆம் ஆண்டுக்கு பின் கோப்பா டெல் ரே தொடரின் இறுதிப் போட்டியில் பார்சிலோனோ அல்லது ரியல் மாட்ரிட் அணி விளையாடாமல் போவது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *