கொரோனா வைரஸ் – தந்தையின் இறுதி சடங்கை காணமுடியாத மகன்.. நெஞ்சை உருக்கும் சோகம்..!!

வீடியோ கால் மூலமாக தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்த மகன், கோரோனோ அறிகுறியால் ஏற்பட்ட சோகம் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

கொரோனா  அறிகுறி இருப்பதாக கருதி  மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்ட மகன் அங்கிருந்தபடியே தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை பார்க்க நேர்ந்த சோகம், கேரளாவில் நடந்திருக்கிறது. கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபீக் என்ற 30 வயது இளைஞன் கடந்த 8ம்  தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார். கட்டிலிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக அவசரமாக தாயகம் திரும்பியிருந்தார்.

கொரோனோவின்  அச்சுறுத்தல் இருந்த சூழலில், விமான நிலையம் வந்திறங்கிய இவருக்கு லேசான இருமல் இருந்ததாகவும், தானாகவே மருத்துவ அதிகாரிகளை அணுகிய அவர், பின்னர் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சூழலில் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரின்  தந்தை உடல்நலம் மோசமடைந்து கடந்த 9ம்  தேதி மரணமடைந்தார். ஒரே மருத்துவமனையில் இருந்த போதிலும் வைரஸின் அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால் தனது தந்தையின் உடலை நேரில் பார்க்க முடியாத துரதிர்ஷ்டசாலி ஆனார். அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து தனது தந்தையின் உடலை ஆம்புலன்ஸில் செல்வதே அறையின் ஜன்னல் வழியாக பார்த்து கண்ணீர் வடித்தார் அந்த இளைஞன்.

அதன் பிறகு மொபைல் வீடியோ கால் மூலமாக தனது தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்து துடித்துப் போனார்.  இதனை அடுத்து தனது நிலை குறித்து அவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் விமானநிலையத்தில் தாமாகவே முன்வந்து மருத்துவ குழுவை அணுகியிருக்காவிடில்  தனது தந்தையை கடைசியாக ஒருமுறையாவது பார்த்திருக்க முடியும் என்றும், அவ்வாறு செய்ய விரும்பவில்லை எனவும்  கூறியிருந்தார்.

காரணம் தன்னை தாக்கியிருக்கும்  இந்த வைரஸ் பலருக்கும் பரவிவிடும் என்கிற காரணத்தால் தாமாகவே மருத்துவமனையில் சேர்ந்ததாக கூறியிருந்தார். ஆகவே வெளிநாடுகளில் இருந்து வருவோர் தயங்காமல் மருத்துவ குழுவினரை அணுகி தங்களது உடல் நிலையை பரிசோதித்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அருகில் இருந்து தந்தையை கவனித்துக் கொள்ள வந்த மகன், அருகில் இருந்து தந்தையின் உடலை கூட பார்க்க முடியாமல் போனதால் நெஞ்சை உருக்கும் வேதனையான விஷயம்.

ஆனால் இதற்குப் பிறகுதான் இவ்விஷயத்தில் மிகப்பெரிய திருப்பம் நிகழ்ந்தது. இவரிடம் இருந்து எடுக்கப்பட்ட  ரத்த மாதிரியில் கொரோனா  பாதிப்பு இல்லை என்பதுதான் அந்தத் திருப்பம்.  ஒரே ஒரு சந்தேகம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத சோகத்தை இந்த இளைஞருக்கு ஏற்படுத்திவிட்டது.