கொரோனா எதிரொலி – சிஏஏக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டங்கள் ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக சிஏஏக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏ, என்பிஆர்-ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களும் ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் போராட்டத்தை ஒத்திவைப்பதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.

இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசு சார்பில் நேற்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான ஆலோசனையில் டிஜிபி, காவல் ஆணையர், ஹஜ் கமிட்டியின் அபுபக்கர், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.