கொரோனா அச்சுறுத்தல் – மதுரை மத்திய சிறையிலிருந்து 51 கைதிகள் ஜாமீனில் விடுவிப்பு!

கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுரை மத்திய சிறையிலிருந்து 51 கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவருக்கு குணமானது. இதனால் தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா இருந்த நிலையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் 3 பேருக்கு இருக்கிறது என்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மூன்று பேரில் இரண்டு பேர் தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள், ஒருவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவிலும் 198 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் சுய ஊரடங்கை பின்பற்றுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதனால் தமிழகத்தில் நாளை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் சிறிய குற்றங்களுக்காக கைதான 51 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 12 மாவட்ட நீதிபதிகள் மதுரை மத்திய சிறைக்கு வந்து விசாரணை நடத்தி கைதிகளுக்கு ஜாமீன் வழங்கியுள்ளனர்.