சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி டிடிவி நகர் பகுதியில் நிதி ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மணிவண்ணன் ஈராக் நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி நிதி ஸ்ரீ மருந்து ஒன்றை ஆன்லைனில் அனுப்பும்படி கணவரிடம் கேட்டிருந்தார். இந்நிலையில் ஒரு தனியார் கொரியர் நிறுவனத்தின் மூலமாக அந்த மருந்து அனுப்பி வைத்திருப்பதாக மணிவண்ணன் கூறியிருந்தார். அந்த மருந்து சரியான நேரத்தில் வராததால் நிதி ஸ்ரீ செல்போனில் அந்த தனியார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண்ணை தேடி பார்த்து அதில் கிடைத்த எண்ணில் தொடர்பு கொண்ட போது எதிர் முனையில் பேசியவர்கள் நாங்கள் அனுப்பும் செயலியை பதிவு செய்யும்படி கூறி ஒரு செயலியை அனுப்பியுள்ளனர்.
இதனை உண்மை என நம்பிய நிதி ஸ்ரீ அந்த செயலியை தன்னுடைய செல்போனில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த செயலியில் கேட்கப்பட்ட தன்னுடைய வங்கி தொடர்பான விவரங்களையும் கூறியுள்ளார். இதனையடுத்து அவருடைய வங்கி கணக்கிலிருந்து அவருக்கு தெரியாமலேயே ஏழு தவணைகளில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 997 அவர்கள் எடுத்திருக்கின்றனர். இது குறித்து நிதி ஸ்ரீ சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜுடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொல்கத்தா மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்து மோசடி நபர்கள் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கு எண்ணையும் சைபர் கிரைம் போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.