கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சித் திகில் சம்பவத்தில், யோகா ஆசிரியை ஒருவர் மூச்சுப்பயிற்சியின் உதவியால் உயிர் தப்பியுள்ளார். கணவர் ஒரு யோகா ஆசிரியையுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்ற சந்தேகத்தில், பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவ்வாசிரியைக்கு கொலை முயற்சி செய்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பிந்து என்ற பெண்ணுக்கு தனது கணவர் யோகா ஆசிரியையுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனை தனது நண்பர் சதீஷ் ரெட்டிக்குச் சொல்ல, சதீஷ் யோகா கற்றுக்கொள்பவர் போல நடித்து அந்த ஆசிரியையுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். முழுமையாக நம்பிய ஆசிரியை, சதீஷிடம் யோகா வகுப்புகள் நடத்தி வந்தார்.
பின்னர், அக்டோபர் 23-ஆம் தேதி, சதீஷ் அந்த யோகா ஆசிரியையை காரில் ஏற்றி நகருக்கு வெளியே அழைத்துச் சென்றார். வழியில் சதீஷின் நண்பர்கள் மூவரும் பிந்து உட்பட 5 பேர் சேர்ந்து அந்த ஆசிரியையை கடுமையாக தாக்கினர். ஒரு காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று, அவரை கொலை செய்ய முயன்ற இந்த குழு, அவர் உயிரிழந்துவிட்டதாகக் கருதி மண்ணில் புதைத்து விட்டு தப்பித்தனர்.
தனக்கு நேர்ந்த அசாதாரண சூழ்நிலையில் யோகா ஆசிரியை தன்னுடைய மூச்சைப் பிடித்து மயக்கமடைந்தது போல நடித்து தப்பித்தார். சில நேரம் கழித்து மண்ணிலிருந்து வெளியேறி, அருகிலிருந்த கிராம மக்களிடம் உதவி கேட்டார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவத்தையடுத்து, பிந்து, சதீஷ் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் சினிமா பாணியில் அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த 2003 ஆம் ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் கில் பில் என்ற திரைப்படம் வெளியான நிலையில் அந்த படத்தில் கதாநாயகியை சிலர் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கும் நிலையில் அவர் தனக்குத் தெரிந்த தற்காப்பு கலையின் மூலம் உயிர்பிழைப்பது போன்ற காட்சிகள் இருக்கும். இதேபோன்று தற்போது மூச்சு பயிற்சியின் மூலம் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியை உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.