கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவாங்கூர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் சிவகாமி தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஆனால் விவாகரத்து கொடுக்க ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
கடந்த மாதம் 28-ஆம் தேதி காரில் வந்து கொண்டிருந்த ராமகிருஷ்ணன் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என கூறினார். உடனே சிவகாமி ஜனப்பன் சத்திரம் பகுதிக்கு வருமாறு தெரிவித்தார். அங்கு ராமகிருஷ்ணன் வந்ததும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் விவாகரத்து தர மறுத்ததால் சிவகாமி தான் கூலிப்படையை வைத்து தனது கணவரை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனால் சிவகாமி, அரும்பாக்கத்தைச் சேர்ந்த நவீன், கெல்வின் ராஜ், நிதிஷ் ராஜ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.