கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் மறைவை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் என்பவர் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அரசு சார்பில் நெல்லை தங்கராஜுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை தங்கராஜ் இன்று உடல் நலக்குறைவினால் திடீரென காலமானார்.

இவருடைய மறைவுக்கு  இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும் .. பரியேறும் பெருமாள்.” என்று இரங்கல் தெரிவித்திருந்தார். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி : “கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் இன்று அதிகாலை உடல்நல குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.

மக்கள் கலைஞரான திரு. தங்கராஜ் அவர்கள் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதில் வெளிப்படுத்திய உணர்வுபூர்வமான நடிப்பால் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். அன்னாரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், கலை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் உரித்தாக்கி கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்..