கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் குழந்தைகளை மீட்டு தர வலியுறுத்தி குமார் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தனது மனைவி மீது நடவடிக்கை எடுத்து குழந்தைகளை மீட்டு தர வலியுறுத்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.