“குமரியை புறக்கணித்த முதல்வரை நீங்கள் புறக்கணியுங்கள்”… மு.க. ஸ்டாலின் தீவிர பிரசாரம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பரப்புரை செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தி. மு. க தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், நாகர்கோவில் சட்டசபை தொகுதி தி. மு. க வேட்பாளர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி சட்டசபை தி. மு. க வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ஸ்டாலின் பேசுகையில், “தேர்தலுக்கு மட்டும் உங்களை பார்க்க வரும் ஸ்டாலின் அல்ல நான். உங்கள் சுக, துக்கங்களில் பங்கெடுக்கக்கூடிய ஸ்டாலினாக உங்கள் முன் நிற்கிறேன். வரும் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற வைய்யுங்கள். சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல நாடாளுமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் விஜய் வசந்துக்கு கைச்சின்னத்திலும், நாகர்கோவில் சட்டசபை தேர்தலில் சுரேஷ்ராஜனுக்கும், கன்னியாகுமரி தொகுதியில் ஆஸ்டினுக்கும் வாக்களியுங்கள். கருணாநிதி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன்.

அப்போது அவர் உங்களுக்கு செய்திருக்கும் வளர்ச்சிப்பணிகளை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். கழக வேட்பாளர் ஆஸ்டின் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். சட்டசபையில் அவர் எழுந்தாலே ஆளும் கட்சிகள் உண்ணிப்பாக கவனிப்பாங்க. அவர் ஆணித்தரமாக, உறுதியாக எடுத்து வைக்கும் வாதங்களையும், அவர் எதிர்கட்சியில் இருந்து ஆற்றிய பணிகளை மறக்க முடியாது.

நாடாளுமன்றத்துக்கு போட்டியிடுகிறார் காங்கிரஸ் கட்சியின் விஜயகுமார் என்கிற விஜய் வசந்த். நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஏன் வந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியும். வசந்தகுமாரை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பிவச்சீங்க. பாராளுமனரத்தில் உங்கள் பிரச்னைக்காக அவர் குரல்கொடுத்தார். கொரோனா தொற்று நோய் சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலம்பெற்று திரும்புவார் என நம்பினோம். அப்போது அவர் மறைந்த செய்தி இடியாக வந்தது. எனவே இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது இடைதேர்தலில் அவரது மகன் விஜய் வசந்துக்கு கைச்சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தரவேண்டும்.

பாம்புக்கடியின் விஷத்தை விட துரோகத்துக்கு விஷம் அதிகமாக இருக்கும். குமரி மாவட்டத்தில் அ. தி. மு. க கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரைக்கூட தேர்ந்தெடுக்காததால் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என்கிறார். ஓட்டுப்போடவில்லை என்பதற்காக இந்த மாவட்டத்தையே புறக்கணித்த முதலமைச்சரை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். அ. தி. மு. க-வைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுக்கவில்லை அதனால உங்களுக்கு திட்டங்கள் வரல என வாய்கூசாமல் சொல்கிறார். அவரை தேர்ந்தெடுக்கலாமா. அவரது தொகுதியான எடப்பாடியிலேயே அவர் ஒன்றும் செய்யவில்லை. அவரை முதலமைச்சராக அமர வைக்கக்கூடாது.