கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. அங்கு அணில் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் நிரப்புவதற்காக காவல்துறை அதிகாரியான சந்தோஷ் குமார் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் அணிலிடம் ரூ.2100க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினார். அதன்படி அணிலும் ரூ. 2100-க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை கேட்டுள்ளார். ஆனால் சந்தோஷ் குமார் பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து காரை எடுத்துச் செல்ல முயன்றார்.
இதனால் அணில் காரின் முன் நின்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது சந்தோஷ்குமார் காரின் முன் நின்ற அணில் மீது காரை ஏற்றி 600 மீட்டர் வரை இழுத்து சென்றுள்ளார். இதனைக் கண்ட சாலையில் உள்ள மக்கள் அதை வீடியோ எடுத்தனர். இதைத்தொடர்ந்து அந்த வீடியோ வைரலான நிலையில் காவல்துறை ஐஜி சுனில் குமார் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சந்தோஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சந்தோஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.