தில்லியில் 20 வயது பெண் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தில் புது தகவல் வெளியாகியுள்ளது.

சுல்தான்புரியிலிருந்து குதுப்கா் பகுதியை நோக்கி சென்ற காா் ஒன்றில் பெண் ஒருவா் சிக்கி சாலையில் 12 கிலோ மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டதில் அவா் பரிதாபமாக இறந்தார். அப்பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் மீது காா் மோதியது. இதையடுத்து  எதிா்பாராத வகையில் அவரின் கால் காரின் சக்கரத்தில் சிக்கி 12 கி.மீ. தொலைவுக்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். முதலில் வெளியாகிய தகவலில் பெண்ணின் உடல் 5 கி.மீ தொலைவுக்கு இழுத்துச்செல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 12 கி.மீ தொலைவுக்கு பெண்ணின் உடல் இழுத்துச் செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து காரிலிருந்த 5 போ் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையில் விபத்து நடந்தபோது, அந்த ஸ்கூட்டரில் மற்றொரு பெண்ணும் வந்துள்ளார். அப்போது விபத்தில் சிக்கி லேசான காயமடைந்த அவர், காரில் இருந்தவர்களை பார்த்து அச்சமடைந்து அங்கிருந்து தப்பியோடினார். விபத்தில் இறந்த பெண்ணின் தந்தை கடந்த வருடம் உயிரிழந்த நிலையில், தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பை இவர் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் விபத்தில் இறந்த பெண் பாலியல் ரீதியாக பாதிப்புக்குள்ளானாரா என்பதை கண்டறிய அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யும்படி தில்லி காவல்துறையை தேசிய மகளிா் ஆணையம் (என்சிடபிள்யு) திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

இந்த சம்பவம் தொடா்பாக கைதான தீபக் கன்னா (26), அமித் கன்னா (25), க்ரிஷன் (27), மிதுன் (26), மனோஜ் மிட்டல் ஆகிய 5 பேரையும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனா். இம்மனுவை நேற்று விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் அஜய் சிங் பரிஹா், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.