காய்கறிகளை தரம் அறிந்து சமைப்பதற்கு வாங்குங்கள்..!!இதுதான் வாங்கும் முறையாகும்..!!

எந்தெந்த காய்களை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும். அவற்றில் முத்தி போயிருந்தால் எப்படி இருக்கும், சமையலுக்கு ஏற்ற காய் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்..

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு வாங்கும்பொழுது தழும்புகள், ஓட்டைகள் இல்லாமல் இருக்கவேண்டும். பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் இருந்தாலும், அதை தவிர்க்கவும். தோல் சுருங்கி இருந்தால் அவற்றையும் வாங்கக்கூடாது. விரல் நகத்தினால் கீறினால் தோல் வர வேண்டும். இதுதான் நல்ல உருளைக்கிழங்கு என்பதற்கான அடையாளம். மேலும் சுவையாகவும் இருக்கும்.

முருங்கைக்காய்:

முருங்கைக்காய் வாங்கும்பொழுது கரும்பச்சை நிறத்திலும் சற்று உருண்டையாக இருக்கும்.  கட்டையாக இருந்தால் உள்ளே சதை இருக்காது என்பதற்கு அடையாளம். இரு முனைகளை பிடித்து லேசாக முறுக்கினால் வளைந்து கொடுக்க வேண்டும். வளைந்து கொடுக்கும்பொழுது மழமழவென்று சத்தம் கேட்டால் அது முற்றிப் போன காய்.

முள்ளங்கி:

முள்ளங்கி வாங்கும்பொழுது காய் நீண்டு, தலைப்பகுதி காம்பு, நிறம் மாறி வாடி விடாமல் பச்சையாக இருக்க வேண்டும். நகத்தால் லேசாக கீறி பார்க்கும் போது தோல் மென்மையாக இருந்தால் அது இளசு காய். சமைப்பதற்கு ஏற்றது.

பீன்ஸ்:

பீன்ஸ் வாங்கும்பொழுது பிரஸ் பீன்ஸ் நல்ல பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். உடைந்தால் பட்டென்று உடைய வேண்டும். அதுதான் சமையலுக்கு சுவையாக இருக்கும். வெளிர் பச்சை நிறத்தில் இருந்தால் அது முற்றிப் போன பீன்ஸாக  இருக்கும்.

கத்தரிக்காய்:

கத்தரிக்காய் வாங்கும் பொழுது ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும் என்பதால் சிறு ஓட்டை கூட இல்லாமல் நன்றாக பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீண்டு இருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்ற இருந்தால் காய் முற்று போயிருக்கும் என்பதற்கான அர்த்தம். காய் முழுக்க ஒரே நிறத்தில் பளபளவென்று இருப்பது நல்ல காய். பச்சை நிறத்தில் உள்ள கத்தரிக்காய் மீது வெள்ளை வரிகள் இருந்தால் அது கசக்கும்.

வாழைக்காய்:

வாழைக்காய் வாங்கும் பொழுது அந்த இடத்தில் வெள்ளையாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. வாங்கி வந்த பிறகு சுத்தமாக கழுவிவிட்டு தண்ணீரில் போட்டு வைத்தால் வாடாமலும் , பழுக்காமல் இருக்கும்.

வெண்டைக்காய்:

வெண்டைக்காய் வாங்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். நுனியை உடைத்தால் உடைய வேண்டும். அதுதான் பிஞ்சு காய், உடையாமல் வளைந்து இரண்டாக பிளந்தாலோ அல்லது காம்பு சுருங்கி இருந்தாலும் அது முற்றிப்போன காய்.

முட்டைகோஸ்:

முட்டைகோஸ் வாங்கும் பொழுது இலைகள் வெள்ளையாக இருக்க கூடாது. பச்சையாக உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். அது தான் நல்ல  முட்டைகோஸ். அளவில் சிறியதாகவும் கணமாகவும் இருந்தால் சுவையாக இருக்கும். நடு காம்பு வெள்ளையாகவும் நாற்றம்  இல்லாமல் இருக்க வேண்டும். தவறினால் அது பழையது என்பதற்கான அர்த்தம்.

சேப்பங்கிழங்கு:

சேப்பங்கிழங்கு வாங்கும்பொழுது நீண்டிருக்கும் கிழங்கு சுவை தராது. உருண்டையாக இருக்கும் சேப்பங்கிழங்கை பார்த்து வாங்க வேண்டும். மேலே கீறி பார்த்தால் உள்ளே வெள்ளையாக இருப்பது நல்ல கிழங்காக அர்த்தம்.

பீர்க்கங்காய்:

பீர்க்கங்காய் வாங்கும்பொழுது பார்ப்பதற்கு பச்சை பசேலென்று இருப்பதை வாங்க வேண்டும். மேலும் அடிப்பகுதி குண்டாக இல்லாமல், காய்  முழுவதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்கவேண்டும். காயின் மேல் நரம்புகள் எடுப்பாகவும், வெள்ளை புள்ளிகள் இருந்து காம்பு வறண்டு இருந்தால் அது முற்றிப் போனது  என்பதற்கான அர்த்தம்.

மாங்காய்:

மாங்காய் வாங்கும்பொழுது தேங்காயை காதருகே வைத்து தட்டி வாங்குவதுபோல் மாங்காயும் தட்டி பார்த்து வாங்கவேண்டும். மாங்காய் தட்டிப் பார்க்கும் பொழுது சத்தம் வந்தால் அது மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும். சதைப் பகுதி நிறைந்திருக்கும்.

பச்சை மிளகாய்:

பச்சைமிளகாய் வாங்கும்பொழுது காயும், காம்பும் பச்சையாக இருந்தால் பிரஷ்ஷாக இருக்கும். காம்புகள் சுருங்கி கறுத்துப்போயிருந்தால் பழையது என்று அர்த்தம். மிளகாய் நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதுவே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும்.

சவ்சவ் காய் :

சௌசௌ காய் வாங்கும் பொழுது காயின் மேல் பகுதியில் விரிசல்கள் பெரியதாக இல்லாதபடி பார்த்து வாங்க வேண்டும். விரிசல்கள் பெரிதாக இருந்தால் அது முற்றிய காய் என்பதற்கான அர்த்தம்.

அவரைக்காய்:

அவரக்காய் வாங்கும் பொழுது ஒவ்வொரு காயும் தொட்டு பார்க்க வேண்டும். அதில் விதைகள் பெரியதாக இருந்தால் காய்களைத் தவிர்க்கவும். இளசாக இருக்கும் காய்களில்  விதைகள் சிறியதாகவே இருக்கும். மேலும் நார்ச்சத்து அதிகமிருக்கும்.

கோவைக்காய்:

கோவைக்காய் வாங்கும் பொழுது முழுவதும் பச்சையாக இருக்க வேண்டும். இளம் சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும் காய்களை  வாங்க வேண்டாம். அது கறுக்கும்  நிலையில் இருப்பதால் ருசி இல்லாமல் இருக்கும்.