திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கொடிமலர் (48) என்ற மனைவியும், வளர்மதி என்ற மகளும் ராஜகுமாரன் (29) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வளர்மதிக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் லிங்கம் வழக்கம்போல் கடைக்கு பழங்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் அவருடைய மனைவி கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கொடி மலரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக சோமரசம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜகுமாரன் தந்தை வழி உறவினர் ஒருவரின் மகளை காதலித்து வந்ததும் அதற்கு அவருடைய தாயார் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது. அதாவது தன்னுடைய சொந்தத்தில் இருந்து தான் திருமணம் செய்ய வேண்டும் என கொடிமலர் தன் மகனிடம் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து கடந்த 6-ம் தேதி ராஜகுமாரன் விஷம் குடித்துவிட்டார். அவரை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜகுமாரன் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீட்டிற்கு வந்தார். இதைத்தொடர்ந்து ராஜகுமாரன் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் சம்பவ நாளில் அவரின் தந்தை வெளியே சென்றுவிட்ட நிலையில் இது தொடர்பாக ராஜகுமாரனுக்கும் அவருடைய தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜகுமாரன் தன்னுடைய தாயை கத்தியால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் யாரோ வந்து தன் தாயை கொலை செய்து விட்டதாக அவர் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையின ராஜகுமாரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.