மதுரை மாவட்டத்திலுள்ள மேலமாசி வீதியில் இருக்கும் நகை கடையில் கார்த்திக் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி கார்த்திக் நகைகளை சரிபார்த்தபோது 10 பவுன் தங்க நகை குறைவாக இருந்ததை கண்டுபிடித்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது விற்பனை பிரிவில் பணிபுரியும் அப்துல்பயாஸ்(26) என்பவர் தங்க நகைகளை நைசாக எடுத்து வேறு பெண்ணிடம் கொடுத்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அப்துல் திருச்சியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தனது வருங்கால மனைவிக்கு பரிசு கொடுப்பதற்காக தங்க சங்கிலியை திருடி காதலியின் அக்காள் திவ்யாவிடம் கொடுத்துள்ளார். முன்னதாக திவ்யா 15 கிராம் பழைய நகையை கொடுத்து புதிதாக 13 கிராம் எடையில் நகை ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அப்துல் புதிய நகையை எடுத்து வைத்துக்கொண்டு காதலிக்காக திருடிய நகையை அவரது அக்காளிடம் மோசடியாக கொடுத்து அனுப்பி வைத்தது தெரியவந்தது.