காணாமல் போன குழந்தை…. 3 மணி நேரத்தில் மீட்பு…. போலீஸ் நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் பெரியமாம்பட்டு பகுதியில் கூலித் தொழிலாளியான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அகிலேஷ் என்ற மகனும், அர்ச்சிதா என்ற 9 மாத பெண் குழந்தையும் இருக்கிறது. நேற்று ஜெயச்சந்திரன் வேலைக்கு சென்ற பிறகு அர்ச்சிதாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இதனால் சத்யா தனது மகனை அக்கா அம்சவள்ளியின் வீட்டில் விட்டுவிட்டு பெண் குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றார். இதனையடுத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்த அகிலேஷ் நடந்து சென்று கடைவீதியில் இருக்கும் பிள்ளையார் கோவில் அருகே நின்று அழுது கொண்டிருந்ததை சிலர் பார்த்தனர்.

குழந்தை யாருடையது என்பது தெரியாததால் பொதுமக்கள் அகிலேஷை தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையில் குழந்தையை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதனையடுத்து போலீசார் அகிலேஷின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அதனை பார்த்த சிலர் ஜெயச்சந்திரன்-சத்யா தம்பதியினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு வந்த பெற்றோரிடம் போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர்.