தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இதற்கிடையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கள்ளக்குறிச்சிக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் நேற்று கள்ளக்குறிச்சிக்கு சென்றார்.

அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக கட்சியின் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசும் காவல்துறையினரும் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்களின் அருகில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாகவும், திமுகவினர் துணையுடன் இது நடைபெறுவதாக தெரிந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.