கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சகோதரி மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளால் மீனவர்கள் மரணமடைந்து வருகிறார்கள். இதை சரி செய்வதற்கு அரசு செலவு பண்ணாமல் கலைஞரின் பேனா நினைவு சின்னத்தை வைப்பதற்காக செலவு செய்கிறார்கள். அந்த பணம் மக்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் அதிகாரம் உங்களிடம் இருக்கும் போது மக்களின் கருத்தையும் மீறி பேனா சிலை வைப்பீர்கள் என்றால் அதிகாரம் எங்களிடம் வரும்போது அந்த பேனா சிலை கட்டாயமாக உடைக்கப்படும் என்று கூறினார். அதன்பிறகு பேனாசிலை வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டால் கட்டாயமாக நான் போராட்டங்களை முன்வைப்பேன் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்பாக பேனா சிலை வைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு பேனாசிலையை வைத்தால் அதை நான் வந்து உடைப்பேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.