நாமக்கல் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கண்ணன் இதில் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, உதவி செயலாளர் சுரேஷ், சிவராஜ் போன்றோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணி, குடிநீர் வளங்கள் உட்பட பல்வேறு பணிகளை தனியார் மையமாகும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் எனவும், அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் எனவும் தூய்மை பணியாளர்கள் கோஷங்களை எழுப்பி உள்ளனர். அதேபோல் முன் களப்பணியாளர்களுக்கு ஏற்கனவே அரசு அறிவித்தபடி ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் வழங்க வேண்டும் எனவும் மாதம் தோறும் ஐந்தாம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.