கலெக்டர் அலுவலகத்தில்…. “சத்துணவு பொறுப்பாளர் மகனுடன் தீக்குளிக்க முயற்சி”…. பரபரப்பு….!!!!

கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பொறுப்பாளர் மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகாவில் வி.புதுப்பாளையத்தில் வசித்து வருபவர் சசிகுமார். இவருடைய மனைவி அன்னபூரணி(42). இவர் வெங்கந்தூரில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தன்னுடைய இளைய மகன் தமிழரசன் உடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியும் பிடிங்கி அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.

அதன்பின் அவர்கள் இருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அன்னபூரணி கூறியதாவது, என்னுடைய மூத்த மகன் அஜித்குமார் வி. புதுப்பாளையத்தில் வசித்த ஒருவரிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் நின்றுவிட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் எங்களிடம் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வருகின்றார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் அடியாட்கள் மூலம் எனது மகன் அஜித்குமாரை தாக்கியுள்ளார். அதோடு மட்டுமல்லாது என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்கின்றார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதை கேட்டு அறிந்த காவல்துறையினர் இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்து காவல்துறையினர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.