தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி, தேவன் குடி, வடசருக்கை, கணபதி அக்ரஹாரம், மணலூர், சோமேஸ்வரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பு பயிர்களில் ஒருவிதமான மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டு கரும்பின் வளர்ச்சி குன்றி ஒரு அடி உயரத்தில் உள்ள கரும்பிலேயே எட்டு கணுக்களும் உள்ளது. இந்நிலையில் கரும்பின் தோகையை உரிக்கும் போது அதன் உள்ளே எறும்பு, பூச்சி இருக்கிறது.

மேலும் வளர்ச்சி இல்லாத காரணத்தினால் பயிர்களை வயலிலேயே அழிக்கும் நிலை உருவாகியுள்ளது. கரும்பு  சாகுபடி செய்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.